பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிலை கண்டுபிடிப்பு
காரியாபட்டி: காரியாபட்டி பி.புதுப்பட்டி அருகே 3 அடி உயரம், இரண்டே கால் அடி அகலம் கொண்ட ஒரு சிலை கண்டறியப்பட்டது. இச்சிற்பம் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது:
சமணர் சிலையானது வர்த்தமானர் என்னும் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிலை ஆகும். இச்சிலை தியான நிலையில் அமர்ந்தவாறு அர்த்த பரியங்க ஆசனத்தில், யோக முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபா வளையமும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், பக்கவாட்டில் சித்தாக்கிய இயக்கியும், இயக்கனான மாதங்கனும் சாமரம் வீசுவது போல் உள்ளது. சமண சிலையை மக்கள் சவணர் சாமி என்றும், குலதெய்வமாக எண்ணி, பொங்கலிட்டு, முடி காணிக்கை செலுத்தி வணங்கினர். இப்பகுதியில் சமணர் சார்ந்த நிகழ்வுகளை காணும் போது மக்கள் சமய சகிப்புத்தன்மை கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது, என்றனர்.