ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது : சிவலிங்கம், சுவாமி சிலைகள் வெளியில் தெரிந்தன
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசிப்பர்.
இந்நிலையில் நேற்று காலை இக்கடல் திடீரென 100 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. இதனால் பாசி படிந்த பவளப்பாறைகள், பக்தர்கள் பூஜித்து கடலில் போட்ட சிவலிங்கம், சுவாமி சிலைகள் வெளியில் தெரிந்தன. மேலும் கடலோரத்தில் குழியில் தேங்கி கிடந்த கடல் நீரில் சிப்பிகள், சிறிய ரக மீன்கள் தத்தளித்தன.அக்னி தீர்த்தம் உள்வாங்கியதை கண்ட பக்தர்கள், தீர்த்தம் என்னவாயிற்று என பீதி அடைந்தனர்.மதியம் 12:00 மணிக்கு பின் கடல் நீர்மட்டம் உயர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. கோடையில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றத்தால் காலையில் அக்னி தீர்த்தம், பாம்பன் தென் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.