பார்த்திவேந்திர வர்மன் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மடிப்பாக்கத்தில், கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் ராஜகோபால் கூறியதாவது: சோழ மன்னன் பார்த்திவேந்திர வர்மன் ஆட்சியின், மூன்றாமாண்டு கால கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில், மடிப்பாக்கத்து சிவபெருமானுக்கு இருவேளை, கோவிலை சுற்றி வந்து திக்குகளில் படையல் வைத்து நடத்தப்படும், தோல் கருவி கொண்டு இசைத்து பலி பூஜை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பூஜை தொடர்ந்து நடக்க, கோவிலுக்கு நந்தவனம் ஏற்படுத்தப்பட்டு நிலம் வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மத்தை காப்பவர்கள் பாதத்தை, தன் தலைமேல் வைத்து போற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.