வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றிய தன்னார்வலர்கள்
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், வனத்துறையினருடன் இணைந்து ஏராளமான தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. கோவிலையொட்டி உள்ள மலைத்தொடரில், 7வது மலையுச்சியில் சுயம்பு வடிவில் உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும் பிப் முதல் மே மாதம் வரை, பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்தாண்டு, கடந்த பிப்., 28 முதல் தற்போது வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி நிறைவடைந்துள்ளது. இந்தாண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசித்து வந்துள்ளனர். இதனால் வெள்ளியங்கிரி மலை மற்றும் அடிவாரப் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பை, வாட்டர் பாட்டில்கள் குவிந்துள்ளது. இதனை, வனத்துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், வனத்துறையினருடன் இணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தென் கயிலாய பக்தி பேரவை, சிறுவாணி விழுதுகள், இந்துஸ்தான் கல்வி குடும்பத்தின் என்.சி.சி., நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பேரூர் தமிழ் கல்லூரி, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து, கடந்த இரண்டு நாட்களாக, வெள்ளியங்கிரி மலை மற்றும் அடிவார பகுதியில், தூய்மை பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக அந்த தூய்மை பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் இருந்த, இரண்டு டிராக்டர் அளவுள்ள பிளாஸ்டிக் குப்பை அப்புறப்படுத்தப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர், பிளாஸ்டிக் கழிவுகளை, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.