ஆவிகளுக்கு விருந்து வைத்து மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்
வேலுார்: வேலுார் அருகே, ஆவிகளுக்கு மலைவாழ் மக்கள் விருந்து வைத்து கொண்டாடினர். பேய், பிசாசு, ஆவிகளுக்கு பயந்து ஓடும் மக்களை பார்த்திருக்கிறோம். ஆனால், ஆவிகளை வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்து கொண்டாடும் விழா, வேலுார் மாவட்டம், ஊசூர் அடுத்த குருமலையில் நேற்று மாலை நடந்தது.
இதற்காக இங்குள்ள செல்லியம்மன், தஞ்சையம்மனுக்கு மக்கள் பொங்கல் வைத்தனர். பின் ஆவிகளை வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கும் விழா நடந்தது. இதற்காக அங்குள்ள கோவிலில் ஒன்று கூடிய மக்கள், மேள தாளம் முழுங்க பேய் நடனமாடி, கடந்தாண்டு இறந்தவர்களின் வீடுகளுக்கு ஒன்றாக சென்று, இறந்தவர்கள் படத்திற்கு ஆரத்தி எடுத்து, பொங்கல் வைக்கின்றனர். சிறிது நேரம் அந்த வீட்டின் கதவை மூடி விடுகின்றனர். பிறகு திறந்து பார்த்தால், பொங்கல் இருக்காது. ஆவி சாப்பிட்டதாக கூறுகின்றனர். மேலும், ஆடு, கோழிகளை பலி கொடுத்தும் ஆவிகளுக்கு விருந்து வைக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்களை கேட்டதற்கு, ‘இதுபோல செய்தால் இறந்தவர்கள் ஆவி நம்மை ஒன்றும் செய்யாது, ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு செய்கிறோம்’ என்றனர்.