உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்டத்திலும் பிண்டத்திலும் கடவுள் இருப்பது எங்கே

அண்டத்திலும் பிண்டத்திலும் கடவுள் இருப்பது எங்கே


பூமிக்கு மேலே அண்ட வெளியில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு வானங்கள் உள்ளன என்றும் அவற்றின் பெயர்கள் முறையே சல வெளி,  வன்னி வெளி, வாயு வெளி, ஆகாச வெளி, படர வெளி, பராபர  வெவளி, சச்சிதானந்த வெளி என்றும், ஏழாவது வெளியாகிய சச்சிதானந்த வெளிக்கு மேலே எட்டாவது வானத்தில் நிர்குணமாய், நிர்மலமாய், இருளற்ற பூரணப்பொருளாய், மனதிற்கு எட்டாத பரம்ம  பிரம்மம் இருப்பதாக சட்டைமுனிவர் தம் வாத காவியம் 1000 என்னும் நுாலில்  கூறியுள்ளார்.
1. நிர்க்குணமாய் நிர்மலமாய் நிரஞ்சனமு மாகி
       நேரான பூரணமாய மன மெட்டாத
  சற்குணமாய்ச் சமரசமாய்த் தானும் தாண்டி
        சச்சிதானந்த வெளிக்கப்பால் நின்ற
  தற்குணமாய் எனை ஆண்ட சின்னமயத்தைப்போற்றி
        சமரசமாய் வேதாந்த வாதம் சொல்வேன்
   நற்குணமாய் சனகாதி ரிஷிகள் பாதம்
        நலம் பெறவே நாவில் வைத்துப் பாடுவேனே

2. பாடுகின்றேன் பராபரமே அகண்ட வித்து  
        பண்பாக அதற்கடுக்கப் பரையினுடை வெளி தான்
நீடுகிறேன் அதற்கடுக்க ஆகாச வெளி தான்
       நேராக அதன் கீழே வாயு வாச்சு
நாடுகிறேன் அதன் கீழே வன்னி வன்னி
       நலமாக அதன் கீழே சல மாச்சு
ஊடுகிறேன் அதன் கீழே பூமி யாச்சு
       ஓகோ கோ சீவனெல்லாம்  உதித்த  வாறே
சட்டை முனிவர் பாடலில் மேலேயுள்ள ஏழாவது வானம் முதல் கீழ் நோக்கி வானங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் வள்ளலார் தம் அருட்பெருஞ்சோதி அகவல்  பாடலில் இதை பதிவு செய்துள்ளார்.
புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளாவி
அவையுற வகுத்த அருட் பெருஞ் சோதி
இப்பாடலில் இருந்து பூமியிலுள்ள இமயமலையைச் சேர்ந்த துாய்மையான கயிலையங்கிரியை, பொற்பதியாகிய சச்சிதானந்த வெளியோடு இணைத்து, உலகம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் சுழலுமாறு  பரப்பிரம்மம் பொருத்தியுள்ளது என்று அறிகிறோம் என்கிறார். பரபிரம்மம், அண்டத்தில் எட்டாவது வானத்தில் பொருந்தி இருப்பதை போன்று, பிண்டமாகிய மனிதனின் சிரசில் உள்ள பிரம்மரந்திரத்தின்  எட்டாவது நிலையாகிய துரியாதீதம் என்னும் விஞ்ஞானமயக் கோசத்தில் விளங்குகிறது என்ற உண்மையை சட்டை முனிவர் இப்படி குறிப்பிடுகிறார்.
உச்சிக்குழி முதல் உள்நாக்கு வரை நீண்டுள்ள பிரம்மரந்திரம் என்னும் நுண்ணிய துவாரத்திலுள்ள (கீழிருந்து மேலாக) வெளிப்பாழ், ஒளிப்பாழ், வெளியொளிப்பாழ், நிர்க்குணத்தின் பாழ், அன்னமய கோசம்,  பிராணமய கோசம், மனோமய கோசம் அல்லது துரியம் (சுக்கும சரீரம் இருக்குமிடம்) ஆகிய ஏழையும் தாண்டி எட்டாவது நிலையாகிய துரியாதீதம் என்னும் விஞ்ஞானமய கோசத்தில் உயிராகிய  பரப்பிரம்மம் ஒளிர்கிறது.
 
உரைக்கிறேன் வெளிப்பாழும் ஒளியின் பாழும்
       ஓகோ கோ வெளியொளியாய் நின்ற பாழும்
நிரைகிறேன் இது கடந்தால் நிர்குணத்தின் பாழும்
       நேரான மனதுக்கும் எட்டா தாகி
விரைக்கிறேன் அன்னமயம் பிராணமய மாகி
        மேவி நின்ற மனோமயமாய் வெளியில் கூடி
திரைக்கிறேன் புவியடங்கலும் ஒன்றாய் நின்ற
       திறமான விஞ்ஞான மயமுமாச்சே.
 சட்டை முனிவரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் போகர் ஏழாயிரம், காண்டம் 2, பாடல் எண் 1315 ல் உள்ள இப்பாடல் அமைந்துள்ளது.
 
பகரவே வெளிப்பாழும் ஒளியின் பாழும்
        பாங்காக வெளியொளியாய் நின்ற பாழும்
நிகரவே அப்பாழில் நிர்க்குணத்தின் பாழும்
       நேர்மையாய் மனத்துக்கும் எட்டா தாகி
அகரவே அன்னமயம் பிராண மயமாய்
       அதனின்று மனோமயம் வெளியில் கூடிப்
புகரவே அடங்காலும் ஒன்றாய் நின்று
        பூர்த்தியாய் விஞ்ஞான மயமு மாச்சே.
குறிப்பு: பாழ் என்ற சொல், ஆகாயம் என்று பொருள்படும்.
விஞ்ஞானமய கோசத்தில் நம் உயிராக கடவுள் விளங்குகிறார் என்ற உண்மையை வேதம் இவ்வாறு விளங்குகிறது.
இந்த ஆத்மா சுயம்பிரகாசமாகப் பிரகாசிப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பது விஞ்ஞானமய கோசத்தில் எப்போதும் பிரகாசித்து கொண்டிருப்பது.
  – ஆதிசங்கரர், விவேக சூடாமணி. 380.
சித்தர்களும், வேதங்களும் கூறியுள்ள இதே கருத்து தேவாரம், திருவருட்பா, திருக்குறளிலும் இடம் பெற்றுள்ளது.
* எண்ணுடை இருக்குமாகி இருக்கினுட் பொருளுமாகி – அப்பர், திருஆப்பாடி
(பிரம்மரந்திரத்தின் எட்டாவது நிலையாகிய துரியாதீதத்தை இருப்பிடமாகக் கொண்டு, செம்பொருளான உயிராகி)
* எண்ணகத்து இல்லை அல்லர் உணர் அல்லர்
அப்பர், திருவீழிமிழலை
(எட்டாவது இடமாகிய துரியாதீதத்தில் இல்லை என்றோ உள்ளார் என்றோ கூற இயலாத நிலையில் இருப்பவர்)
* எட்டு நாண்மலர்க்கொண்டவன் சேவடி – அப்பர், திருவதிகை
* இறையவனை மறையவனை எண்குணத்தினானை
(சுந்தரர் தேவாரம்)
* வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஓர்  எண் குணத்தவ நீ தான்
(திருவருட்பா, பிள்ளைச்சிறு விண்ணப்பம்)
* கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
திருக்குறள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !