தேவதானம் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது
தளவாய்புரம்: தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொடிமரத்திற்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், நெற்கதிர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 9ல் திருக்கல்யாணம், 11ல் தேர் திருவிழாவும் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி கற்பகதரு, பூத, ரிஷப வாகனங்களிலும் அம்பாள் கிளி, காமதேனு வாகனங்களிலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தினமும் மாலையில் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவஹர், கோயில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.