வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரத்திற்கு புதிய கதவுகள்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், கிழக்கு கோபுரத்தில் புதிய கதவுகள் பொருத்தப்பட்டன.வரதராஜப் பெருமாள் கோவில், கிழக்கு ராஜகோபுரம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சீரழிந்து வந்தது. கதவுகளும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தன. இதனால் அந்த கோபுர வாயில் மூடியே கிடந்தது. சமீபத்தில் நடந்த கோவில்
கும்பாபிஷேகத்தையொட்டி, கிழக்கு கோபுரம் புதுப்பிக்கப்பட்டது. புதிய கதவுகள் செய்யும் பணியும் துவக்கப்பட்டது. தற்போது, பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு மரத்தில், 28.5 அடி உயரம், 15 அடி அகலம், 8 அங்கும் கனம் கொண்ட கதவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பணி சமீபத்தில் முடிந்து வந்தது. புதிய கதவுகள், நேற்றுமுன்தினம், கிழக்கு கோபுர வாயிலில் பொருத்தப்பட்டன.இது குறித்து கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் கூறும்போது,""கிழக்கு கோபுர வாயிலில் புதிய கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. கதவில், சிறிய வழிக்கான கதவு மற்றும் குமிழ்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். கதவுகள்
பொருத்தப்பட்டுவிட்டதால், கிழக்கு கோபுரம் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், என்றார்.