உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா.. பூனை, எலியை வைத்து வினோத வழிபாடு

மாரியம்மன் திருவிழா.. பூனை, எலியை வைத்து வினோத வழிபாடு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் நடந்த மகா மாரியம்மன் திருவிழாவில், எருது பிடித்தல் நிகழ்ச்சியில், பூனை, எலி ஆகியவற்றை ஒரே பானைக்குள் வைத்து வழிபடும் வினோத சடங்கு நடந்தது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் உள்ளது. இங்கு உள்ள மகா மாரியம்மன் திருக்கோயிலில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாரியம்மன் திருவிழா நடக்கும். கடந்த, 22ம் தேதி, கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டுதல், கோவிலில் இருந்து சக்தி கம்பம் அழைத்து வருதல், சக்தி கம்பம் வந்து நாட்டுதல், அக்னி சட்டியுடன் வலம் வருதல், நாயக்கன் பாளையத்தில் இருந்து நகை சீர், புதுப்புதூரில் இருந்து பட்டு சீர் கொண்டு வருதல், சக்தி கரகம் அழைத்தல், திருக்கல்யாணம், மாவிளக்கு, முளைப்பாரி அழைத்தல், கம்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று எருது பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோயிலுக்கு முன்புறம் இரண்டு அடிக்கு குழியைத் தோண்டி, அதில் பானையை வைத்து, பானைக்குள் எலி, பூனை ஆகியவற்றை விட்டு, அதை வெள்ளை துணியால் கட்டி, அதை மூங்கிலால் ஆன படலால் மறைத்து, பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளை மாடுகளை மூங்கில் படல் மீது நடக்க வைக்கும் வினோத திருவிழா நடந்தது. இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், எலியும், பூனையும் வைத்து வழிபடும் போது பூனை, எலியை கவ்வி கொல்லாமல் இருந்தால், இந்நாட்டில் பொதுமக்கள் எதிரிகளுடைய துன்பம் இல்லாமல் நிம்மதியாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்நிகழ்ச்சியில், பூனை, எலியை கொல்லாமல் விட்டதால், நாட்டு மக்கள் எதிரிகள் துன்பம் இல்லாமல் நிம்மதியாக இருப்பர் என்றனர். இந்நிகழ்ச்சியில் நாயக்கன்பாளையம், கோவனூர், புதுப்புதூர், பழையபுதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !