குச்சனூரில் சனிபகவான் நீலாதேவி திருக்கல்யாணம்
தேவாரம்: குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனிபகவான் கோயில் உள்ளது. சனி தோஷ நிவர்த்தி ஸ்தலமான குச்சனூரில், மூலவர் சுயம்பு வடிவாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆண்டுதோறும் நடக்கும் ஆடித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சனிபகவான்-நீலாதேவி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. உற்சவ மூர்த்தி காப்பு கட்டி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். வேத மந்திரங்கள், பெண்களின் குலவை ஒலி முழங்க, தலைமை பூசாரி ஜெயபால்முத்து தாலி கட்டினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு மங்கல பொருட்களை உபயதாரர்கள் வழங்கினர்.
இன்று ஆடி மூன்றாம் வார திருவிழா நடக்கிறது. மாநிலத்தின் பிற பகுதிகலில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வரும் பக்தர்களுக்காக தேனி, போடி, கம்பம், தேவாரம் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.