ராஜநாகலட்சுமி கோவிலில் வளைகாப்பு திருவிழா
மோகனூர்: ராஜநாகலட்சுமி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, 11ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா மற்றும், 16 அடி ராஜகுண்டலினி அம்மனின், 32ம் நாள் மண்டல சிறப்பு பூஜை, நேற்று கோலாகலமாக நடந்தது. அதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.மோகனூர், ராசிபாளையம் மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், ஆடி வெள்ளிக்கிழமை வளைகாப்பு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 11ம் ஆண்டு வளைகாப்பு திருவிழா மற்றும், 16 அடி ராஜகுண்டலினி அம்மனின், 32ம் நாள் மண்டல சிறப்பு பூஜை, நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு, அபிஷேகம், 10 மணிக்கு கோ, சுமங்கலி மற்றும் கன்னிகா பூஜையும், 11 மணிக்கு சீர் வரிசை வழங்குதல், பகல் 12 மணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, பக்தர்கள் கோவிலில் உள்ள புற்றுக்குள் வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை போட்டு வழிபட்டனர். அதை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. அதையடுத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு, வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக
வழங்கப்பட்டது. இப்பூஜையில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து, 3,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிப்பட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, ராஜநாகலட்சுமி அம்மன் அறங்காவலர் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.