தீப்பாய்ந்த சகோதரியின் சாபம் நீங்க சீர்வரிசை செய்யும் வினோத திருவிழா
செஞ்சி : செஞ்சி அருகே தீப்பாய்ந்த சகோதரியின் சாபம் நீங்க உடன் பிறந்த சகோதரிகளுக்கு சீர்வரிசை செய்யும் வினோத திருவிழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் உள்ள தீப்பாஞ்சாள் கோவிலில் வெளியூருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்த பெண்கள் நேற்று மதியம் 3.30 மணியளவில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதற்கு முன்னதாக சகோதரிகளை மகிழ்விக்க அண்ணன், தம்பிகள் சீர்வரிசையாக புதுப்புடவையும், சீர் வரிசையும் செய்திருந்தனர். இத்திருவிழா குறித்து கோவில் பூசாரி கண்ணன் கூறியதாவது : செஞ்சி தாலுகா பாடிபள்ளம் கிராமத்தில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் தாண்டவராயன், ரங்கநாதன், கோனேரி, தில்லை கோவிந்தன் ஆகிய நான்கு சகோதரர்கள் இருந்தனர். இவர்களுக்கு தனம் என்ற தங்கை இருந்தார். தங்கையை செஞ்சியைச்சேர்ந்த ஒருவருக்கு ஏழு வயதில் திருமணம் செய்து கொடுத்தனர். அறியா பருவத்தில் நடந்த திருமணம் என்பதால் தனம் கணவர் வீட்டில் வாழாமல், தாய் வீட்டில் தங்கி விட்டார். பருவ வயதை அடைந்ததும், கணவர் வீட்டுக்கு செல்லும்படி சகோதரர்கள் கூறினர். தனம் தாய் வீட்டை விட்டு போக மறுத்தார். இதனால் தனத்தின் அண்ணிமார்கள் தனத்தின் கற்பை பற்றி தவறாக பேசினர்.தனது கற்பை நிரூபிக்க தீப்பாய தயார் என தனம் கூறினார். சகோதர்களும் தீக்குண்டம் மூட்டினர். தீக்குண்டத்தை சுற்றி வந்து தீப்பாயும் முன் அண்ணன்களை கண்ணீர் மல்க தனம் பார்த்த போது, அவர்களிடம் துக்கமோ, தங்கை பாசமோ காணவில்லை. மாறாக தனம் தப்பி செல்லாதபடி நான்கு புறமும் காவல் இருந்தனர். இதில் மனம் வருந்திய தனம் தீக்குள் பாய்வதற்கு முன் உங்கள் வம்சத்தில் தலை மகள் தாலி அறுப்பாள் என்றும், கொடுமைக்கு காரணமான முதல் சகோதரர் தாண்டவராயன் குடும்பம் விளங்காமல் போகும் என்று சாபம் இட்டாள். இச் சாபத்தினால் பல தலைமுறைகளாக தலைமகள் சுமங்கலியாக சாகாமல், கணவர் இறந்த பிறகே இறந்துள்ளனர். தாண்டவராயன் வம்சம் அழிந்து போனது. இதனால் மற்ற சகோதரர்கள் இடம் பெயர்ந்து மாத்தூர், வரிக்கல், தச்சம்பட்டு, வந்தவாசி மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் குடியேறினர். தீப்பாஞ்சாள் அம்மனின் சாபத்தின் உக்கிரத்தை குறைக்க 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரிகளை அழைத்து புதுப்புடவையும், சீர் வரிசையும் செய்து மகிழ்விக்கின்றனர். சீர் வரிசை பெறும் பெண்கள் தாய் ஊரில் உள்ள தீப்பாஞ்சாள் அம்மனுக்கு அன்று பொங்கல் வைத்து சகோதரர்களின் குடும்பம் நலமுடன் வாழ அம்மனிடம் பிரார்த்திக்கின்றனர். இதில் பூசாரிகள் பங்கேற்பதில்லை. கன்னி பெண்களே பூஜைகளை செய்கின்றனர். இவ்வாறு பூசாரி கண்ணன் கூறினார். இந்த விழாவே நேற்று தச்சம்பட்டு கிராமத்தில் நடந்தது. இதற்காக பெங்களூரு, சென்னை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்த பெண்கள் 40 பேர் வந்திருந்தனர். இவர்களில் 80 வயது மூதாட்டி முதல் சமீபத்தில் திருமணம் முடித்தவர்கள் வரை அனைவரும் தவறாமல் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஒரே மாதிரியான சேலையும், சீர் வரிசையும் சகோதரர்கள் சார்பில் எடுத்து கொடுத்திருந்தனர். சகோதரர்கள் தந்த புதுப்புடவையை கட்டி பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.