உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு!

ஏர்வாடி தர்காவில் முளைப்பாரி இறக்கி வழிபாடு!

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், முளைப்பாரியை இறக்கி வைத்து இந்துக்கள் வழிபாடுசெய்த பின், கடலில் கரைத்தனர். ஏர்வாடியில் முத்துமாரியம்மன் கோயிலில் ஏர்வாடி காலனியை சேர்ந்த ஆதி திராவிட மக்கள் கடந்த 31ல் முளைப்பாரி வைத்தனர். தர்கா ஹக்தார்கள் சார்பில் துல்கருணை, ஒன்றிய கவுன்சிலர் காதர் பாட்சா கலந்து கொண்டனர். நேற்று மாலை 4.30 மணிக்கு காலனியிலிருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோயில் சென்று, முஸ்லிம் தெருக்கள் வழியாக மாலை 6.30 மணிக்கு தர்கா சென்றது. தர்கா நிர்வாக அலுவலர் சிராஜ்தீன் தலைமையில் ஊர்வலத்தை ஹக்தார்கள் வரவேற்றனர். பெண்கள் மூன்று முறை தர்காவை சுற்றி வலம் வந்து முளைப்பாரியை தர்கா வளாகத்தில் இறக்கி வைத்து வேண்டுதல் செய்தனர். உலக மக்களிடம் சமூக நல்லிணக்கம் தொடரவும், அமைதியாக வாழவும் வேண்டி தர்கா ஹக்தார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஆதிதிராவிடர் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட முளைப்பாரி பூக்களை பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் நேர்ச்சி செலுத்தினர். தர்கா நிகழ்ச்சிக்கு பின் பெண்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று கடலில் கரைத்தனர்.ஏர்வாடி காலனி தலைவர் சுக்கூர் கூறியதாவது: பல தலைமுறையாக முளைப்பாரியை ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு வந்து வைத்து மரியாதை செய்த பின், கடலில் கரைத்து வருகிறோம். இதனால் எங்களுக்கு மனம் மகிழ்ச்சியடைகிறது. சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக பாதுஷா நாயகம் தர்கா விளங்கி வருகிறது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !