புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணிப்பெருவிழா கொடியேற்றம்!
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணிப்பெருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக இன்று (10ம் தேதி) காலை துவங்குகிறது.தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் தோன்றியது. இங்கு ஆகமவிதிப்படி தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகிறது. மூலவர் புற்றுமண்ணால் ஆனதால், மூலதஸ்தான அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது இல்லை. தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது.ஐந்தாண்டுக்கு ஒருமுறை அம்மனுக்கு மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடத்தப்படும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில், ஆவணிப்பெருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக இன்று (10ம் தேதி) துவங்குகிறது. காலை 8.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மன் படிச்சட்டத்தில் வீதியுலாவும் நடக்கிறது. முன்னதாக, மாலை ஆறு மணிக்கு விக்னேஷ்வர பூஜை நடத்தப்படும். 12ம் தேதி இரவு ஏழு மணிக்கு மேல் முத்துப்பல்லக்கு விழா, 14ம் தேதி மாலை ஆறு மணிக்கு முத்துப்பல்லக்கு விடையாற்றி விழா, 19ம் தேதி மாலை சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 26ம் தேதி மாலை அன்னவாகனத்தில் அம்மன் புறப்பாடு ஆகியவை நடக்கிறது. அடுத்த மாதம் (செப்.,) இரண்டாம் தேதி மாலை சிம்மவாகனத்தில் அம்மன் புறப்பாடு, தொடர்ந்து, எட்டாம் தேதி மாலை பெரிய காப்பு, ஒன்பதாம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை வெற்றி அன்னவாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடக்கிறது. செப்., 10ம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 11ம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை பூத வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 12ம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 13ம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை யானை வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து, 14ம் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, மாலை சேஷ வாகனத்தில் அம்மன் புறப்பாடு, 15ம் தேதி காலை அம்மன் வெண்ணெய் தாழி அலங்கார புறப்பாடும், மாலை குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடக்கிறது. 16ம் தேதி மாலை மூன்று மணிக்கு தேர் வடம்பிடித்தல், 17ம் தேதி மாலை மஞ்சள்நீர் தீர்த்தவாரி, கொடியிறக்கம், 30ம் தேதி மாலை ஏழு மணிக்கு தெப்பத்திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, அக்., மாதம் இரண்டாம் தேதி மாலை ஏழு மணிக்கு தெப்பவிடையாற்றி விழா ஆகியவை வெகுவிமர்சையாக நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், அரவிந்தன், குணசேகரன் ஆகியோர் தலைமையில் தேவஸ்தான பணியாளர்கள் செய்துள்ளனர்.