உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் கோவிலில் நடந்தது என்ன? கவர்னர் தமிழிசை விளக்கம்

நடராஜர் கோவிலில் நடந்தது என்ன? கவர்னர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த சம்பவத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆனித் திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. அதை யொட்டி, அக்கோவிலுக்கு சென்ற புதுச்சேரி கவர்னர் தமிழிசை, சுவாமியை வழிபட படிக்கட்டில் அமர்ந்தார்.அப்போது, தீட்சிதர் ஒருவர், இங்கே உட்காரக் கூடாது; சற்று தள்ளி உட்காருங்கள் என கூறி அவமதித்ததாக தகவல் பரவியது.இதுகுறித்து, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த கவர்னர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நடராஜர் கோவிலில் நடந்தது குறித்து அவர் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று அங்கு அமர்ந்தேன். ஒருவர் வந்து என்னிடம், இதற்கு அப்பால் நிறைய இடம் உள்ளது. அங்கு சென்று உட்காருங்கள் என்றார். இல்லை. நான் இறைவனை பார்க்க வந்துள்ளேன்; இங்கு தான் உட்காருவேன் என்று சொன்னதும், அவர் சென்று விட்டார். நான் படியில்கூட உட்காரவில்லை. நான் இறைவனை பார்க்கச் சென்றேன். யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற எல்லா தீட்சிதர்களும் என்னிடம் வந்து, இறைவனுக்கு அளித்த மாலை மற்றும் பிரசாதம் கொடுத்தனர்; வேறொன்றும் இல்லை. சிதம்பரம் கோவிலுக்கு பிரச்னை தீர்க்கலாம் என்று வந்தால், பிரச்னை வருவது தான் பிரச்னையாக இருக்கிறது போலும். அவர்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களின் பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு சிவன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !