சதுரகிரியில் இரவில் கனமழை; பாதுகாப்பாக பக்தர்கள் மீட்பு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பெய்த கனமழையினால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு, நேற்று அதிகாலை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக மலை அடிவாரத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த ஜூலை 25 முதல் இன்று வரை சுவாமி தரிசனம் செய்ய விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து தினமும் அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதன்படி நேற்று முன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நிலையில், பெரும்பாலான பக்தர்கள் இரவு 7:00 மணிக்குள் மீண்டும் மலையடிவாரம் திரும்பினர். மதிய நேரத்தில் மலையேறிய பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இரவு 7:30 மணிக்கு மேல் சதுரகிரி வனப் பகுதியில் பலத்த சாரல் மழை பெய்ய துவங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த சாரல் மழையினால் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை உட்பட பல்வேறு நீர்வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோயிலில் இருந்து இரவு 7:00 மணிக்கு மேல், கீழிறங்கியவர்கள் ஆங்காங்கே வழித்தட பாதையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வனத்துறை மற்றும் தீயணைப்பு துணையினர் கண்காணித்து வந்தனர். கோயிலிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படாமல் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை 07:30 மணிக்கு ஓடைகளில் நீர்வரத்து குறைந்த நிலையில், கோயில் மற்றும் வழித்தடப்பாதையில் தங்கி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தாணிப்பாறை மலை அடிவாரம் அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்த சுமார் 4000 மேற்பட்ட பக்தர்கள், காலை 8 40 மணிக்கு மேல் தான் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்த உடன் தாமதமின்றி கீழிறங்க அறிவுறுத்தப்பட்டனர். கடந்த ஐந்து நாட்களாக தினமும் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்து வருவதால், தானிப்பறையில் இருந்து கோயில் வரையுள்ள வழித்தட பாதையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓடை யில நீர் வரத்தைப் பொறுத்தே இன்று (ஜூலை 30) பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.