சதுரகிரியில் மீண்டும் கனமழை; மலையில் இருந்து இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோயில் மலைப்பகுதியில் நேற்று இரவு மீண்டும் கன மழை பெய்ததால் பக்தர்கள் மலையடிவாரம் திரும்ப முடியாமல் நடுவழியில் தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 25 முதல் நேற்று வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காலை 5:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தினமும் மாலை 4:00 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் சிரமத்துடன் மலையடிவாரம் திரும்பினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலையேறிய நிலையில், அன்றிரவு 07:30 மணிக்கு மேல் தொடர்ந்து கன மழை பெய்ய துவங்கியதால் பக்தர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, மறுநாள் காலை ஓடைகளில் கயிறு கட்டி தீயணைப்புதுறை மற்றும் வனத்துறையினால் மீட்கப்பட்டனர். கடைசி நாளான நேற்று காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் திரும்பி நிலையில், நேற்று மாலை 6:00 மணி முதல் மீண்டும் மலைப்பகுதியில் கன மழை பெய்து ஓடைகளில் கடுமையான நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை உட்பட பல்வேறு நீர்வரத்து ஓடைகளை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை மலைப்பகுதியில் பாதுகாப்பான இடத்தில் இருக்கச் செய்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர். ஓடைகளில் நீர் வரத்து குறைந்த உடன் பக்தர்களை மீட்கும் பணியில் வத்திராயிருப்பு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். வனத்துறை, தீயணைப்பு, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.