உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பந்தளத்தில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா: பிரம்மாண்ட ஏற்பாடு

பந்தளத்தில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா: பிரம்மாண்ட ஏற்பாடு

திருச்சி: கேரள மாநிலம் பந்தளத்தில் வரும் 29-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ஹரிவராசனம் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஹரிவராசனம் என்ற பாடல் 1923-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த கோனகத்து ஜானகியம்மாள் என்பவர் இயற்றி பாடினார். இன்றளவும் இந்த பாடல் சபரிமலை கோவிலில் தொடர்ந்து ஒலித்து வருகிறது.

கடந்த 1954-ம் ஆண்டு பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பாடிய இந்த பாடல் உலக அளவில் அய்யப்ப பக்தர்களிடம் பிரசித்தி பெற்றுள்ளது. பாடல் இயற்றப்பட்ட நுாறாவது ஆண்டை கொண்டாடும் வகையில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா வரும் 29-ம் தேதி பந்தளத்தில் நடக்கிறது. ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா கமிட்டி சர்வதேச தலைவராக சினிமா இசையமைப்பாளர் இளையராஜா தென்தமிழக கமிட்டி தலைவராக திருச்சி, வேலுார் பதிப்பு தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர்.ராமசுப்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வரும் 29-ம் தேதி காலை 6 மணி முதல் பந்தளத்தில் பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் தென்தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்தமிழக கமிட்டி தலைவர் ஆர்.ராமசுப்பு தலைமையில் கலந்து கொள்கின்றனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தேவராட்டம், சிலம்பாட்டம், நாதஸ்வரம், சிவ வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க பாரம்பரிய இசைக்கலைஞர்களுடன் மாபெரும் ஊர்வலம் நடக்கிறது. இதை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். பந்தளராஜா சசிகுமாரவர்மா தலைமை வகிக்கிறார். ஊர்வலம் முடிந்ததும் மாலையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !