பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :1169 days ago
கோவில்பாளையம்: நஞ்சுண்டாபுரம்புதூர், பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கள்ளிப்பாளையம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் புதூரில், பல லட்சம் ரூபாய் செலவில், கருவறை, விமானம், அர்த்தமண்டபம் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி வேள்வி பூஜை உடன் துவங்கியது. இரவு காவடியாட்டம் நடந்தது. 4ம் தேதி மாலையில் வேள்வி பூஜையும், இரவு ஜமாப் இசையும், கலசம் நிறுவுதலும் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தமிழ் முறைப்படி பழனி ஆண்டவர் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அச்சம் பாளையம் குழுவின் பஜனை நடந்தது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்கினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.