திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்பாடு
நாகர்கோவில்: பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று காலை புறப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிப்பட்ட சரஸ்வதிதேவி கோயில் உள்ளது. மன்னர் காலத்தில் இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட போது, மன்னர் உத்தரவின் பேரில் சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் காலத்துக்கு பின்னரும் இந்த மரபு மாறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் 26–ம் தேதி தொடங்க உள்ள இந்த விழாவுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து இன்று காலை 7:30 மணிக்கு பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று காலை புறப்பட்டது. பல்லக்கில் கொண்டு வரப்பட்ட தேவிக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்திய பின்னர் நாகர்கோவில் வழியாக குமாரகோயில் சென்றது. இன்று காலை குமாரகோயில் முருகன் மற்றொரு பல்லக்கில் பத்மனாபபுரம் புறப்ட்டு செல்வார். நவராத்திரி பவனியில் சரஸ்வதிதேவிக்கு துணையாக செல்வதாக ஐதீகம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் இந்த பவனி நடைபெற்றது. இந்த ஆண்டு பழையது போல் பவனி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக–கேரள அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.