திருக்கடையூர் கோவில் பெயரிலான இணையதளங்களை முடக்க உத்தரவு
மதுரை:மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை முடக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவற்றுக்காக பூஜைகள் செய்யப்படுகின்றன. கோவில் நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி, அதிகாரப்பூர்வமற்ற போலி இணையதளங்கள் உள்ளன. இவற்றில் கோவில் பூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர். அவர்களிடம் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போலியானவை எவை, அதிகாரப்பூர்வமான இணையதளம் எது என்பதை பக்தர்கள் அடையாளம் காண்பதில் சிரமங்கள் உள்ளன. சட்ட விரோத போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அறநிலையத்துறை கமிஷனர், திருவானைக்காவல் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: மக்களின் உணர்வை யாரும் மூலதனமாக்கக்கூடாது. கோவில் பெயரில் தனி நபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். அரசுத் தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.