அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா : பூஞ்சோலை எழுந்தருளினார் அம்மன்
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு எழுந்தருளினார்.
அகரம் முத்தாலம்மன் கோவில் விழா கடந்த வாரம் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின் அம்மன் ஆயிரம் பொன் சப்பரம் மற்றும் கொழு மண்டபத்தில் எழுந்தருளினார். சுற்றுப்பயதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமம் மற்றும் நகர் பகுதிகளிலிருந்து, பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர். தொடர் வான வேடிக்கைகளைத் தொடர்ந்து நேற்று மதியம் 1: 30 மணியளவில், சொருகு பட்டை சத்திரத்தில் உலா வந்த அம்மன் பூஞ்சோலைக்கு எழுந்தருளினார். கோயில் முதல், அகரம் பஸ் ஸ்டாப், தாடிக்கொம்பு பாலம், பூஞ்சோலை வரை திரளான மக்கள் ரோட்டின் இரு புறமும் நின்று அம்மனை தரிசித்துச் சென்றனர். பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து தலைமையில், அறங்காவலர் குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். தாடிக்கொம்பு போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது.