திருப்போரூரில் சஷ்டி விழா சூரசம்ஹார வதத்திற்கு அசுர பொம்மைகள் தயாரிப்பு;
திருப்போரூர் : திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவத்தின் போது வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்தசஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது.
இந்தாண்டு மஹா கந்த சஷ்டி வைபவம் வரும் 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினசரி கந்தசுவாமி, வள்ளி, தெய்வானையருடன் காலை, இரவில் வீதியுலா வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதான சூரம்சம்ஹார விழா வரும் 30ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். சிறப்பு மிக்க இவ்விழாவுக்காக, இவ்வூரில் கெஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், அகிமுகி, தாடுகன், சூரபத்மன் ஆகிய ஆறு அசுரர்களின் முழு உருவ பொம்மைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்துவருகிறது. காகித கூழ், மூங்கில் ஆகியவற்றை கொண்டு அசுர பொம்மைகள் செய்யும் பணி, புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தால்குப்பத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் தலைமையிலான ஸ்தபதி குழுவினர் மூலம் ஒரு வாரமாக நடக்கிறது. இப்பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என, அக்குழுவினர் கூறினர். அதேபோல், சிறுவர்கள் வீரபாகு வேடமணிந்து அசுரர்களை போரிட காகித அட்டை வேல், வீரபாகு கலசங்கள் தயாரிக்கும் பணியும் முழுவீச்சில் நடந்துவருகிறது. வரும் 31ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்: சில ஆண்டுகளுக்கு முன், வெளியூரில் இரும்பு சட்டத்தால் அசுர பொம்மைகள் தயாரித்து, கந்தசுவாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. எடை அதிகமாக இருந்ததால், அசுர பொம்மைகள் ஊர்வலம் வருவதில் சிரமம் காணப்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர், கோவிலிலேயே அசுர பொம்மைகள் தயாரிக்கப்படும் என, அறிவித்தனர் . அதன்படி, சில ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே அசுர பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. விழாவை ஒட்டி மற்ற ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.