உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்னை காப்பது உமக்கு சுமையா ராமா?; கிருதியில் வியக்க வைத்த அர்ச்சனா

என்னை காப்பது உமக்கு சுமையா ராமா?; கிருதியில் வியக்க வைத்த அர்ச்சனா

‘என்னை காப்பது உமக்கு சுமையா ராமா?’ என்ற பொருள் உடைய தியாகராஜரின் ‘ப்ரோவ பாரமா’ கிருதி, பஹுதாரி ராகத்தில், தன் கச்சேரியை ரம்மியமாக துவக்கினார், கர்நாடக இசை உலகில் வளர்ந்து வரும் வாய்ப்பாட்டு கலைஞர் அர்ச்சனா. முருகனை ஒப்பற்ற குருவாக, ஞானத்தின் வடிவமாக போற்றிப் பாடும் ‘சாடிலெனி குருகுஹ’ என்ற பூர்வி கல்யாணி ராக கிருதியை, மிஸ்ர சாபு தாளத்தில், ராக ஆலாபனையோடு துவங்கினார். அப்போது, ரங்கபிரியாவின் கைவிரல் நுனி, பல ஸ்வர பிரயோகங்களை வயலினில் வாசித்து அசரடித்தது. சிட்டை ஸ்வரங்கள் சேர்த்தது மட்டுமல்லாமல், குறைப்பு ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வைகளில், ஒரே நேரத்தில் இருவரும் அசத்தினர்.


மத்திம கால சாகித்யம் அடங்கிய, ‘சந்தான கோபால’ என்ற முத்துசுவாமி தீட்சிதரின் கமாஸ் ராக கிருதியை, மனதிற்கு இதமாக பாடினார். கச்சேரியின் முக்கிய உருப்படியாக ராகம் தானம் பல்லவியை, ‘அவனிதனயா ரமணா, சாகேத்ததாமா ராமா’ என்ற வரிகளை காபி ராகத்தில் சபையில் அரங்கேற்றினார். ஆதி தாளத்தில் அமையப்பெற்ற இந்த பல்லவிக்கு, ராக ஆலாபனை, தானம், நிரவல், மூன்று காலங்களில் பல்லவி, திஸ்ர நடையில் பல்லவி, கற்பனை ஸ்வரங்கள், கோர்வை ஸ்வரங்கள் மற்றும் பல்லவியில் ராகமாலிகா என அனைத்தையும், இறைவனுக்கு படைக்கும் உணவைபோல் பார்த்து பார்த்து கோர்த்திருந்தார். இது, சபையினரை வியக்க வைத்தது. அஸ்வினி ஸ்ரீனிவாசனின் மிருதங்கமும், சுசமுக் காரந்தனின் கஞ்சிராவும் தனி ஆவர்த்தனத்தில் மோதிக்கொண்டன. இந்த ஆக்ரோஷத்தில், சபையோ சூடானது; மனமோ தணிந்தது. இறுதியில், ‘இன்னும் தய பாரதே’ எனும் புரந்தரதாசரின் படைப்பை சிந்துபைரவி ராகத்தில் வழங்கி, ஆழ்வா ர்பேட்டை நாரத கான சபாவில், கச்சேரியை நிறைவு செய்தார். –ரா.பிரியங்கா, குரலிசை பயிற்றுநர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !