உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திருஅத்யயன உத்ஸவம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருமங்கை ஆழ்வார் பாடிய  திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது, 


உற்சவத்தின் பூர்வவாங்க நிகழ்ச்சியான இவ்வைபவத்தை ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் துவக்கி வைக்க லக்ஷ்மி நாராயணன் அரையர் குடும்பத்தினர் மேள தாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துவரப்பட்டனர். பகல் பத்து முதல்நாள் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் காலை 7.00 மணிக்கு புறப்பாடு நடைபெற்று, பகல்பத்து (அர்ஜுன) மண்டபம் சேர்ந்தார். தொடர்ந்து காலை 9 மணி முதல் 12மணி வரை அரையர் சேவை நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல உற்சவ விழாக்கள் நடந்தாலும், வைகுண்ட ஏகாதசி விழாவே  முதன்மையானதாக கருத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. கோயிலில் சிறப்புக்குரிய பகல் பத்து விழா இன்று (20ம் தேதி) காலை தொடங்கியது. பகல் பத்து உற்சவம் முதல் நாளில் நம்பொருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி ; சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி, திருமார்பில் - பங்குனி உத்திர பதக்கம், அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் - ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம், சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை, 8 வட முத்து மாலை; வைரக்கல் அபய ஹஸ்தம் - அதில் தொங்கல் பதக்கம் அணிந்து  அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !