தேவகோட்டை மணிமுத்தாறில் சுவாமிகள் ஐப்பசி முதல் தீர்த்தவாரி
தேவகோட்டை: ஆண்டு தோறும் ஐப்பசி முதல் நாளும், கடைசி நாளும் தேவகோட்டை பகுதியில் உள்ள கோயில்களில் இருந்து சுவாமிகள் விரிசுழியாறு என்று அழைக்கப்படும் மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்வது ஐதீகம் மரபு. இந்த ஆண்டு நேற்று ஐப்பசி முதல்நாள் என்பதால் காலையில் கைலாச விநாயகர், மந்திரமூர்த்தி மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்தனர். நேற்று மதியம் சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாசநாதர், கோதண்டராமர் ஸ்வாமி, ரங்கநாத பெருமாள், கிருஷ்ணர், நயினார்வயல் கிராமத்தைச் சேர்ந்த அகத்தீஸ்வரர் ஆகிய ஏழு சுவாமிகளும் தேவகோட்டை எல்லையில் உள்ள மணிமுத்தாறுக்கு எழுந்தருளினர். அங்கு சைவக் கடவுள்களின் அஸ்திரத்தேவர்கள் . வைணவ கடவுள்களின் சக்கரத்தாழ்வார்கள் ஆற்றுக்குள் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து மீண்டும் அஸ்திரத்தேவர்கள், சக்கரத்தாழ்வார்கள் சுவாமிகளுடன் சேர்த்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தேவகோட்டை பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு சுவாமியும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதிகளின் வழியாக தங்கள் கோவில்களுக்கு சென்றனர்.