உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை அருகே கல்வெட்டுடன் போர் வீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

மானாமதுரை அருகே கல்வெட்டுடன் போர் வீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே க.புதுக்குளம் கிராமத்தில் நாயக்கர் கால போர் வீரன் சிற்பம் எழுத்துப்பொறிப்புடன் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச்சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தைச்சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் க.புதுக்குளம் பகுதியில் சென்று கள ஆய்வு செய்தபோது இந்த சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் கூறிகையில்,

பொதுவாக முற்காலங்களில் போர்களில் சிறந்து விளங்கும் போர்வீரர்களுக்கு அல்லது விலங்குகளுக்கு எதிராக நடக்கும் சண்டையில் வெற்றி பெறுபவருக்கு அல்லது அந்த சண்டையில் வீரமரணம் அடையும் வீரனுக்கு நடுகல் அல்லது வீரக்கல் எடுக்கும் மரபு இருந்து வந்துள்ளது.தற்போது நாங்கள் கண்டுபிடித்த சிற்பமும் அந்த வகையில் உருவானவையே.இந்த சிற்பம் 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் மேல்புறம் வீரனின் சிற்பமும் கீழ்ப்பகுதியில் எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது.சிற்பம் பலகைக் கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.சிற்பத்தின் தலைப்பகுதியில் காதோடு அடைத்தார் போல் கிரீடம் செதுக்கப்பட்டுள்ளது.மார்பில் ஆபரணங்களும் 2 கைகளில் வலது கையில் குறுவாளினை உயர்த்திப்பிடித்தபடியும் இடது கையில் வாளுடன் கூடிய உறையை பிடித்த படியும் சிற்பம் கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது.மேலும் இடையில் ஆடை,ஆபரணங்களுடன் சற்று இடமிருந்து வலமாக சரிந்து காணப்படுகிறது.2 கால்களிலும் வீரக்கழலை அணிந்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் அடிப்பகுதியில் கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்த எழுத்துப் பொறிப்புகள் சற்றே சிதைந்த நிலையில் காணப்படுகிறது.கல்வெட்டு வாசகமானது கிரந்த எழுத்தில் தொடங்கும் இந்த கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் "சுகுந்தன் சங்கம புண்ணிய கங்கை காரா பசுவைக் கொன்ற தோஷத்தில் போய் மடுய" என்றும் அதன் கீழுள்ள வரிகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் வரலாற்றுச் செய்தி என்னவென்றால் சுகுந்தன் என்ற போர் வீரனுக்காக வீரக்கல் எடுத்துள்ளனர்.இந்த வீரக்கல்லை சேதப்படுத்துபவர்கள் புண்ணிய கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போய் மடிவீர்கள் என்று எழுதியுள்ளனர்.இந்த வாசகம் நாயக்கர் காலக் கல்வெட்டுக்களில் பெரும்பாலானவற்றில் நாம் பார்க்கலாம். மேலும் இந்த பகுதியில் இந்த மாதிரியான வீரக்கல் கிடைத்திருப்பது பெருமைப்படக்கூடியதாக உள்ளது என்றும் தற்போது இந்த சிற்பத்தை நவநீத பெருமாள் என்று அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதாக கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !