சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தனி அலுவலர் நியமிக்க கோரிக்கை
மேட்டுப்பாளையம்: சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தனி நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என, திருமுருக பக்த வழிபாட்டு குழு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கடந்த, 35 ஆண்டுகளுக்கு பிறகு, இரு மாதங்களுக்கு முன் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கோவிலில் புதிதாக பணிகள் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், கோவிலுக்கு என தனி அலுவலர் இல்லை. தற்போது இக்கோவில் வனபத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அதனால் இக்கோவிலுக்கு தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என, குமரகுருபர சுவாமி, பக்த வழிபாட்டு குழுவினர், தி.மு.க., கவுன்சிலர் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் திருமுருக பக்த வழிபாட்டு குழு செயலாளர் தனசேகரன், ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு, அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில், 40 ஆண்டுகளுக்கு முன், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டு, தனி அதிகாரி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. அப்போது இதன் உப கோவிலாக, வனபத்ரகாளியம்மன் கோவில் இருந்தது. நாளடைவில் வனபத்ரகாளியம்மன் கோவில் வருவாய் அதிகரிக்கவே, அக்கோவில் மூலக் கோவிலாகவும், சுப்ரமணிய சுவாமி கோவில், உப கோவிலாகவும் மாற்றப்பட்டது. வனபத்ரகாளியம்மன் கோவில் பரம்பரை அரங்காவலர், சுப்ரமணிய சுவாமி கோவிலை, பிரித்துக் கொடுக்க விரும்புகிறார். அதனால், கோவிலின் வளர்ச்சி கருதி, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தனி அலுவலர் நியமிக்க வேண்டும். மேலும் இக்கோவிலுக்கு நிதி வருவாய் ஏற்படுத்தி கொடுக்க, திருமுருக பக்தர்கள் வழிபாட்டு குழுவும், பக்தர்களும் தயார் நிலையில் உள்ளனர். எனவே இக்கோவிலுக்கு என, தனி அலுவலர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை மனுவில் கூறியுள்ளார். இதேபோன்று தி.மு.க., கவுன்சிலர் விஜய காண்டீபன், ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனருக்கு, இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளார்.