1,100 ஆண்டுகள் பழமையான ஜேஷ்டாதேவி சிற்பம், சிவலிங்கம் மீட்பு
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, பாறையில் செதுக்கப்பட்ட, 1,100 ஆண்டுகள் பழமையான விவசாயத்தின் அதிபதி ஜேஷ்டாதேவி சிற்பம், சிவலிங்கம் சிலை மீட்கப்பட்டுள்ளன. க.பரமத்தி ஒன்றியம், சின்னதாதம்பாளையத்தில் பழமையான சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகளை வரலாற்று ஆர்வலரும், ஆசிரியருமான சிவசங்கர், சிவனடியார்கள் முருகேசன், ஜெகதினேஷ், சுப்ரமணியன், சிவநாயனார் ஆகியோர் நேற்று முன்தினம் மீட்டு ஆய்வு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்த பகுதியானது கி.பி. 950ம் ஆண்டு வரை பல்லவ பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பொதுவாக மன்னர்கள் அனைவரும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தந்தனர். அதனால் ஒவ்வொரு கிராமத்துக்கும் கால்வாய்களை வெட்டி விவசாயத்துக்கு நீர் ஆதாரங்களை பெருக்கினர். பெரிய கால்வாய்களை ராஜ கால்வாய் என்று பெயரிட்டு அழைத்தனர். ஆற்றின் கரை ஓரமாகவோ , நீர் நிலைகளின் அருகிலோ கோவில்கள் அமைப்பதை அரசர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். அதுபோல இவ்வூரில் ஓடும் கால்வாய்க்கு ராஜ வாய்க்கால் என்ற பெயர் உண்டு. இதன் அருகேதான், பாறையில் செதுக்கப்பட்டுள்ள தவ்வை (ஜேஷ்டா தேவி) சிற்பமும், சிவலிங்கமும் மீட்கப்பட்டுள்ளன. லிங்கத்தின் உயரம் 5.6 அடி. ஜேஷ்டாதேவி சிற்பத்தின் உயரம் 2.5 அடி , நீளம் 3.25 அடி. பொதுவாக பல்லவர் காலத்தில் நீர் நிலைகளின் அருகில் கட்டப்படும் சிவன் கோவிலில் தவ்வை சிற்பமும் பிரதிஷ்டை செய்வது வழக்கமாய் இருந்தது. ஏனெனில் தவ்வை அன்னை விவசாயத்துக்கும், மக்கள் செல்வத்துக்கும் அதிபதி. தவ்வையின் வலது புறத்தில் அவரது மகன் மாந்தன், இடதுபுறம் மகள் மாந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது வாகனம் கழுதை, காகம். ஆயுதம் துடைப்பம். 10ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக சிறப்பாக இருந்த தவ்வை வழிபாடு, பின் ஏதோ காரணத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டது. இங்கு கிடைத்துள்ள தவ்வை சிற்பம், 9ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். மிக சிறப்பாக இருந்த இந்த கோவிலானது கால ஓட்டத்தில் பராமரிப்பின்மை காரணமாக அழிந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். க.பரமத்தி அருகே நஞ்சை காளகுறிச்சியில் அண்மையில் சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.