சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. நேற்று அதிகபட்ச கூட்டம்; நடை அடைத்தாலும் படியேற அனுமதி
சபரிமலை : கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்ட பின் நேற்று சபரிமலையில் அதிகபட்ச கூட்டம் காணப்பட்டது. இரவிலும் பக்தர்கள் படியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை பக்தர்கள் இந்தாண்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினசரி எவ்வளவு பக்தர்கள் வருகிறார்கள் என்ற விபரம் போலீசுக்கும், தேவசம்போர்டுக்கும் தெரிந்து விடுகிறது. தினமும் சராசரியாக 50 ஆயிரம் பேர் தரிசிக்கின்றனர். நேற்று 70 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் நேற்று சன்னிதான சுற்றுப்புறங்கள் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. 18-ம் படியேற நீண்ட வரிசை காணப்பட்டது. பிரசாத கவுண்டர்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். கூட்டம் அதிகமாகி வருவதால் இரவில் மலையேறி வரும் பக்தர்கள் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் 18 படிகளில் ஏற அனுமதிக்கப்படுவர். இவ்வாறு ஏறுபவர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியே சென்று விட்டு அடுத்து நாள் அதிகாலை நடை திறக்கும் போது வடக்கு வாசல் வழியாக வந்து சாமி கும்பிட முடியும்.