ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்ஸவம்: டிச.23ல் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத உற்ஸவங்கள் டிச. 23ல் பகல் பத்து உற்ஸவத்துடன் துவங்குகிறது. ஜனவரி 2ல் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் ராப்பத்து உற்ஸவம் துவக்கமும், ஜனவரி 8 முதல் 15 வரை மார்கழி எண்ணெய் காப்பு திருவிழாக்களும் நடக்கவுள்ளது.
பகல் பத்து உற்சவம்: டிசம்பர் 23 முதல் துவங்கி ஜனவரி 12 வரை நடக்கவுள்ள பகல்பத்து உற்ஸவத்தின் முதல் நாளில் மாலை 5:00 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சைபரத்தல் பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து தினமும் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர் சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரிய பெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பின்னர் மூலஸ்தானம் திரும்புகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பு: முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 2023 ஜனவரி 2ல் நடக்கிறது. அன்று காலை 6:30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.
ராப்பத்து: ஜன.2 முதல் ஜனவரி 11 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுற்றி பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம், அரையர்சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், சேவா காலம் என மறுநாள் அதிகாலை 5:30 மணி வரை ராப்பத்து உற்ஸவங்கள் நடக்கிறது.
எண்ணெய்காப்பு உற்ஸவம்: ஜனவரி 8 முதல் 15 வரை நடக்கும் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். பகல் 3:00 மணிக்கு அங்கு எண்ணெய்காப்பு உற்ஸவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.