சேலம் மண்டலத்தில் 65 கோவில்களில் திருப்பணி மண்டல வல்லுனர் குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல்
சேலம்: சேலம் மண்டலத்தில், 65 கோவில்களில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின், சேலம் மண்டலத்தில் சேலம், தர்மபுரி மாவட்டங்கள் உள்ளன. இங்கு அறநிலைத்துறை கட்டுப்பாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களின் திருப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக, கோவிலில் எந்த மாதிரியான திருப்பணி மேற்கொள்ள வேண்டும், எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, செயல் அலுவலர்களிடம் அறிக்கை வழங்கினார். இந்த அறிக்கை மண்டல, மாநில குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். அப்போது தான் பணி மேற்கொள்ள முடியும். இதற்காக நேற்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் வளாத்தில் உள்ள மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் மண்டல அளவிலான வல்லுனர் குழு கூட்டம் நடந்தது. இணை கமிஷனர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். இதில் தொல்லியல் துறையினர், ஸ்தபதி, சைவ மற்றும் வைண ஆகம வல்லுனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சேலம் மண்டலத்தில், 65 கோவில்களில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பாக, கோவில் செயல் அலுவலர்கள் அறிக்கை வழங்கினர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஒப்பதல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மாநில குழுவிலும் திருப்பணிக்காக ஒப்புதல் பெற வேண்டும் என அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.