உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி ஊருணியில் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு நடுகற்கள்

வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி ஊருணியில் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு நடுகற்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி ஊருணிக்குள் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரண்டு இனக்குழு தலைவர்களின் நடுகற்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இதில் முதல் நடுகல் 3 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்டதாகும். இதில் குதிரையில் மீது இனக்குழுவின் தலைவன் உட்கார்ந்து வலது கையில் வாள், இடதுகையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தது போன்று காணப்படுகிறது. இதன் அருகில் ஒரு பெண் ஒருகையில் மலர் செண்டும் மறுகையில் பண முடிப்பும் உள்ளவாறு செதுக்கியுள்ளனர். குதிரையின் அடியில் வீரர் ஒருவர் நின்று கும்பிடுவது போலவும் காட்சிப்படுத்தியுள்ளனர். சிற்பங்களின் தலைக்கு மேலாக மணிக்கோர்வைபோன்ற மாலை அலங்காரத்துடன் காணப்படுகிறது. இதனருகே சுமார் 100 அடி தூரத்தில் இரண்டாவது நடுகல் மூன்றரை அடி அகலமும் நான்கரை அடி உயரமும் உள்ளது. இதில் குதிரையில் அமர்ந்தபடி தலைவன் உட்கார்ந்து வலது கையில் வாளும், இடதுகையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தவாறும், குதிரையின் பின்பகுதியில் இரண்டு பெண்களும் உள்ளனர். பெண்கள் ஒருகையில் கும்பமும், மறுகையில் பண முடிப்பும் வைத்துள்ளது போன்ற அலங்காரத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இனக்குழு தலைவனுக்கும் பெண்களுக்கும் நடுவில் உயரமான வெண் குடை ஒன்று உள்ளது.

காந்திராஜன், தொல்லியல் ஆய்வாளர்: மதுரையின் மேற்கே உசிலம்பட்டி பகுதியில் தொடர்ந்து 3000 ஆண்டுகளாக மனித இனம் தொடர்ச்சியாக வாழந்ததற்கான தடயங்கள் கிடைக்கின்றன. சொக்கத்தேவன்பட்டி ஊருணி மேட்டில் பழங்கால முதுமக்கள் தாழிகள் கிடைப்பதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இங்குள்ள இரண்டு நடுகற்களும் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். நேர்த்தியான அலங்காரத்துடன் காணப்படும் நடுகற்கள் இந்த பகுதியில் வசித்த இனக்குழு தலைவர்களின் நினைவாக நடுகற்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !