நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் திரளான யாத்ரீகர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில், மும்மதத்தைச் சேர்ந்த திரளான யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.
நாகையை அடுத்த நாகூரில் பிரசித்திப்பெற்ற ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இத்தர்காவில் 466 வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக தர்கா சன்னதியில் தாபூத் எனும் சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, நாகை, யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி., ஜவகர், ஷாநவாஸ் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். ஜாதி, மத பாகுபாடின்றி வழியெங்கும் திரண்டிருந்த மும்மதத்தைச சேர்ந்த திரளான மக்கள், சந்தனக்கூடு ரதத்தின் மீது பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். ஜென்டை மேளம்,தப்பாட்டம், நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, பேன்ட் வாத்தியங்கள் முழங்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட ரதங்கள், சந்தனக் கூட்டுடன் அணிவகுத்தன. நேற்று அதிகாலை நாகூர் வந்தடைந்த சந்தனக்கூடு ரதத்தில், சந்தனக் குடங்கள் ஏற்றப்பட்டு, தர்காவின் 4 வீதிகள் வலம் வந்த பின், தர்கா ஆதினகர்த்தாக்கள் முன்னிலையில் சந்தனக் குடங்கள் தர்கா சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பாதுஷா நாயகம் ஆண்டவர் சன்னதியில் சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட திரளான யாத்ரீகர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.