மயிலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து சப்த மாதர் சிற்பங்கள்
விழுப்புரம் : மயிலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த மயிலத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த சப்த மாதர் சிற்பங்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: மயிலத்தில் பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3ம் தேதி நடந்தது. அப்போது, அங்குள்ள மூலவர் சிலைக்குப் பின்புறம், பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சில சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது. தற்போது அந்த சிற்பங்கள் வெளியே எடுக்கப்பட்டு, தனியே வைத்து வழிபடப்பட்டு வருகிறது. இந்தச் சிற்பங்களை, நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தோம். அப்போது, அதில் 4 சிற்பங்கள் 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாகவும் மற்ற 3 சிற்பங்கள் 18 அல்லது 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவையாகவும், சப்த மாதர் சிற்பங்களாக இருப்பது தெரியவந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சோழர் காலத்தில் இப்பகுதியில் சப்த மாதர்களுக்கான தனி சிற்றாலயம் இருந்து, பின்னர் மறைந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சிற்பத் தொகுதியில் சில சிற்பங்கள் காலப்போக்கில் சேதம் அடைந்திருக்கலாம். இதனால், மூன்று சிற்பங்கள் மட்டும் 200 ஆண்டுகளுக்கு முன், புதிதாக செய்து வைக்கப்பட்டுள்ளன. சப்த மாதர் வழிபாடு, தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதுபோன்ற சிற்பங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன. விழுப்புரம் அடுத்த பிடாரிப்பட்டு கிராமத்தில் முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்த (கி.பி.1012) சப்த மாதர் சிற்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மயிலம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், மயிலத்தின் பழமையும், தொன்மையும் தெரியவந்துள்ளது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார். ஆய்வின் போது, அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் சரவணகுமார், மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், கேசவன், பிரேம்குமார், சரவணன் உடனிருந்தனர்.