திருவட்டத்துறையில் மாசிமக தேர் திருவிழா
திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், மாசிமக திருவிழாவையொட்டி தேர் திருவிழா நடந்தது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், சப்த துறைகளில் முக்கியமானது. இக்கோவிலில் மாசிமகம் திருவிழா, கடந்த பிப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் திருஞானசம்பந்தரை, இறைவன் வழங்கிய முத்துச்சிவிகை, முத்துக்குடை, மணிச்சின்னம் கொண்டு அழைத்து வருதலும், மாலை பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடந்தது. ஏழாம் நாள் பிச்சாண்டவர் வீதியுலா, எட்டாம்நாள் பாரிவேட்டை திருவிழா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது. திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர், திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி.,காவ்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மார்ச்.6ம் தேதி மாசிமகம், தீர்த்தவாரியும், மார்ச்.7ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.