மடப்புரத்தில் ஆக்ரமிப்பால் பக்தர்கள் சிரமம், ஆக்ரமிப்பை முழுமையாக அகற்ற வலியுறுத்தல்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் ஆக்ரமிப்பை முழுமையாக அகற்றி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் வாசலில் தேங்காய், பழம், பொரி, குங்குமம், எலுமிச்சம்பழம் விற்பனை செய்யும் சிறு சிறு வியாபாரிகள் கோயில் இடம், ரோடு, வரத்து கால்வாய் உள்ளிட்டவற்றை ஆக்ரமித்து 30 வருடங்களுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். தமிழக அரசு கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள், வாகன நிறுத்துமிடம், விடுதி உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக ரோட்டை விரிவு படுத்தவும் கோயில் இடங்களை பாதுகாக்க சுற்றுச்சுவர் எடுக்கும் பணியும் நடந்துவருகிறது. கோயிலின் ஒருபுறம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் மறுபுற ஆக்ரமிப்பை அகற்ற முயன்ற போது சி.ஐ.டி.யூ., அமைப்பு ஆக்ரமிப்பாளர்களுக்கு சாதகமாக கடைகளை அகற்ற கூடாது என போராட்டம் நடத்தினர். திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் ஆக்ரமிப்பாளர்கள் சிறுவர் சிறுமியர்களை கடைகளில் அமர வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.