பங்குனி உத்திரத்திருவிழாவில் பறவைக்காவடி எடுத்து பரவசம்
வால்பாறை;பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு, வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலாக சென்றனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 71ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, முன்தினம் மாலை முருகப்பெருமானுக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், வேல் பூட்டியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. அலகு குத்தி வந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், காலை 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. அன்னதானத்தை முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் ஜோதிபாசு ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.