கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் பக்தர்கள்
கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, நாயுடு சமுதாய மகளிர் சார்பில், பால்குட ஊர்வலம் நடந்தது.
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா, 15 நாட்களாக நடந்து வருகிறது. நாள்தோறும் பல்வேறு சமுதாய மக்களின் உபயமாக தேர் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவில் ஒரு பகுதியாக, இன்று காலை, 10:00 மணிக்கு, நாயுடு சமுதாய மகளிர் சார்பில், டானிங்டன் மகா விநாயகர் கோவிலில் இருந்து, பால் குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில், மேளதாளம் முழங்க, தெய்வம் வேடம் அணிந்து, பொய்க்கால் குதிரை நடனம் இடம்பெற்றது. காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவார திருப்புகழ் பண்ணிசை இடம் பெற்றது. தொடர்ந்து, அம்மனின் தாமரை வாகன திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.