பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மயிலாடுதுறை: பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சோழர்கால கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தக்ஷனுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றதுடன், சூரபத்மன் மயில் உருவாய் பெற்ற பின் ஆறு திருமுகங்களைக் கொண்ட இம்முருக பெருமானை வணங்கி ஞான உபதேசம் பெற்று மயில் வாகனமாக இருக்கின்ற ஸ்தலமாக இது விளங்கி வருகிறது. இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி தக்ஷண கோஷ்டத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஞான குகனாக அருள் பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமான இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தன. தொடர்ந்து பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஆனந்தவல்லி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் செயல் அலுவலர் முருகேசன் ஆய்வாளர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை குலதெய்வக்காரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர். பெரம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.