உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம் நிகழ்ச்சியில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நத்தம், கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற பழமையான கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நேற்று கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலையில் 10.33 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் முழங்க தொடங்கியது. இதில் திருத்தேர் வர்ணபூமாலைகளாலும், வண்ண துணிகளாலும் அலங்கரிங்கபட்டு இருந்தது. இந்த தேரில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக நகர்வலமாக கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. விழாவில் இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தி‌.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா. முன்னாள் தலைவர்கள் சிவலிங்கம், முத்துகுமார்சாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், நகர செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !