திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அமைச்சர் உத்தரவை மீறி, சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி விரைந்து தரிசனம் மேற்கொள்ளும் வகையில், பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து, பொது தரிசனத்தில் அனுமதிக்க, இந்த மாதம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். ஆனாலும், அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் மற்றும் ராஜ கோபுரம் பகுதியில், சிறப்பு கட்டண தரிசனத்துக்கு வழக்கம் போல் ஒருவருக்கு, 50 ரூபாய் நேற்று வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது ‘பவுர்ணமி இரவில்தான் தொடங்குகிறது. அதுவரை கட்டணம் வசூலிக்கப்படும்’ என்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்படி மதியம், 12:00 மணி முதல் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்திலும் வைக்கப்பட்டிருந்த கட்டண தரிசன வழி பேனர், பலகைகள் அகற்றப்பட்டன.