வைகை ஆற்றுப்படுகையில் 18ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டெடுப்பு
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை வரையிலான 25 கி.மீ., தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இடையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது நான்கு அடி உயரமுள்ள சிலையும், அருகிலேயே மூன்று அடி உயரமுள்ள உலோகத்தாலான விளக்கும் கண்டறியப்பட்டது.
சிலை குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில்: இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை, ஆனால் காளி சிலை போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாமி சிலைகளின் கண்கள் நேருக்கு நேராக பார்த்தபடி இருக்கும், இதில் கீழ்நோக்கி பார்த்தபடி உள்ளது. விளக்கிற்கும் இந்த சிலைக்கும் சம்பந்தம் இருப்பது போல தெரியவில்லை, இரண்டும் வேறு வேறு இடத்தைச் சேர்ந்தவையாக இருக்க கூடும். மேலும் இந்த சிற்ப சாஸ்திரப்படி சிலையில் பல தவறுகள் உள்ளன. இதனால் ஆற்றில் கொண்டு வந்து புதைத்திருக்கலாம், ஆய்விற்கு பின் தான் உறுதியாக தெரியவரும், என்றனர். சிலை மற்றும் விளக்கு குறித்து வருவாய்துறை, காவல்துறை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.