உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரணத்துவம் பெற்றால் மனதை கட்டுப்படுத்தலாம்; சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்

பூரணத்துவம் பெற்றால் மனதை கட்டுப்படுத்தலாம்; சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்

பெ.நா.பாளையம்: வேதங்கள் காட்டிய வழியில் பூரணத்துவம் பெற்றால், மனதை கட்டுப்படுத்தலாம் என, சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.

கோவை மாவட்டம், ஆனைகட்டியில் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நிறுவிய ஆர்ஷ வித்யா குருகுலம் ஆசிரமம் உள்ளது. இங்கு அமிர்த பிந்து உபநிஷத் என்ற தலைப்பில் ஆன்மிக முகாம் நடந்து வருகிறது. இதில், ஆர்ஷ வித்யா குருகுல ஆசிரமத்தின் முதன்மை ஆச்சார்யா சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்," பரமானந்தத்தை அடைய, மனதை, ஆசை கொள்வதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். மனதை, அதன் போக்கில் விட்டால், அங்கும், இங்கும் அலைந்து திரியும். மனது ஒரு வேலைக்காரன். அதை நாம், நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். வேதங்கள் காட்டிய வழியில் மனதளவில் பூரணத்துவம் பெற்றால், மனதை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். நான் மனதளவில் அமைதியின்றி தவிக்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தால், அதுவே உங்களுக்கு பிரச்சனையாகி விடும். அதிலிருந்து வெளியே வரும் பாதையை கண்டறிய வேண்டும். நன்கு தேர்ந்த மனிதன், அவனால் என்ன முடியுமோ, அதை மட்டுமே செய்வான். மனது தவறான முடிவுக்கு செல்கிறது என்பதை உணர்ந்தால், அதை சரியான பாதையில் திருப்பி, நடத்திச் செல்ல வேண்டும். தவறான செய்கைகளை மனதில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்" என்றார். ஆன்மீக முகாமை ஒட்டி ஸ்லோகம் பாராயணம், தியானம், சத்சங்கம் கேள்வி- பதில், தட்சிணாமூர்த்தி கோவிலில் வழிபாடு ஆகியன நடந்தன. ஆன்மிக முகாம், இம்மாதம், 8ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !