உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

சித்தலூர் கோவிலுக்கு செல்லும் சாலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

தியாகதுருகம்: பிரசித்தி பெற்ற சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் மணிமுக்தா ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு வழிபாட்டிற்கும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வருகின்றனர். இதனால் தினமும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் காணப்படும். இங்கு போதிய அடிப்படை வசதி இல்லை என்பது பக்தர்களின் நீண்ட நாள் ஆதங்கமாக உள்ளது. குறிப்பாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிவறை வசதி போதிய அளவில் இல்லை. அதேபோல் கோவிலுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் பள்ளம் படுகுழியாக மோசமான நிலையில் உள்ளது. தியாகதுருகம் -விருதாவூர் சாலையில் இருந்து பிரிந்து கோவிலுக்கு செல்லும் சாலையும் கள்ளக்குறிச்சி- கூத்தக்குடி சாலையில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையும் படுமோசமாக உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு கோயிலுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையின் நடுவே விருகாவூரில் சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன் நடந்தது. அப்போது வாகனங்கள் செல்ல மாற்று பாதையாக சித்தலூர் கோவில் வழியே திருப்பிவிடப்பட்டது. இதனால் சாலை மேலும் மோசமடைந்து மெகா சைஸ் பள்ளங்கள் உருவானது. இதனால் தினமும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆடி மாதத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அனலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கோவிலுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !