உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுர பணிகள் ஜரூர்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ராஜகோபுர பணிகள் ஜரூர்

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள், துரிதமாக நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இங்கு வார நாட்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் கோவில் முன்பு ராஜகோபுரம் அமைக்கும்படி, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை அடுத்து, 2017ம் ஆண்டு, ஏழுநிலை ராஜகோபுரம், ஒன்றரை கோடி ரூபாய் செலவில், கட்டும் பணிகள் துவங்கின. ஆனால் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றம், ஜி.எஸ்.டி., பிரச்னையால், ராஜகோபுரம் கட்டும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நின்று இருந்தன.

இந்நிலையில் நன்கொடையாளர்கள், ராஜகோபுரத்தை கட்டிக் கொடுக்க முன் வந்ததை அடுத்து, தமிழக அரசு ஹிந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, ராஜகோபுரம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். தற்போது கோபுரத்தில், கல்கார பணிகள் நடைபெறுகின்றன. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகளை ஆய்வு செய்து, பணியாளர்களிடம், பணிகளை விரைவாக செய்யும்படி அறிவுரை வழங்கினார். மேலும் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, ஏழு நிலை ராஜகோபுர கட்டுமான பணிகளை கண்காணித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !