தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசைக்காக பேரிக்காடுகள் அமைப்பு
தேவிபட்டினம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நவபாஷாணத்தில் பேரிகாடுகள் அமைத்து ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆடி, தை அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக நவபாஷாணம் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நாளை ஆடி 1 (ஜூலை 17) ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை விடப்பட்ட்டுள்ளது. இந்த நிலையில் ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர கூடும் என்பதால், நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் இந்து அறநிலைத்துறை சார்பில் கடற்கரையிலிருந்து நவகிரகங்கள் அமைந்துள்ள கடல் பகுதி வரை கம்பால் பேரிக்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் மேம்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.