திருமலை ஏழுமலையானை நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்து 430 பக்தர்கள் தரிசனம்
ADDED :822 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானை நேற்று ஒரே நாளில் மட்டும், 84ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. வார இறுதி நாட்களில் மட்டுமே சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம், வழக்கத்தை விட அதிகரித்தது. அதன்படி காலையில், 31 காத்திருப்பு அறைகளை கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 18 மணி நேரம் காத்திருப்பிற்கு பின், அவர்கள் தரிசனம் செய்தனர். தர்ம தரிசனத்திற்கு, 18 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 - 4 மணிநேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும், 84 ஆயிரத்து 430 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.