தென்காசி சித்ரா நதியில் மகாஆரத்தி நிகழ்ச்சி; திரளானோர் பங்கேற்பு
குற்றாலம்: தென்காசி சித்ரா நதி யானைப்பாலம் படித்துறையில் மகா ஆரத்தி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நதிகளை தேசிய மயமாக்குவோம், போற்றி பாதுகாப்போம் என்ற தாரக மந்திரமாக கொண்ட ரத யாத்திரை மகா ஆரத்தி வழிபாடுகள், மகா புஷ்கரம், நதிகளை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரசாரங்களை அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் கடந்த 12 வருடங்களாக செய்து வருகிறது. குற்றாலத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் முண்டகக்கன்னி அம்மன் அறக்கட்டளை சார்பில் மகா ஆரத்தி பெருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. அன்றயை தினம் குற்றாலம் அருவிக்கரை பகுதியிலும், நேற்று முன்தினம், புலியருவி பகுதியிலும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
3வது நாளான நேற்று காலை ம்ருத உஜ்ஜய ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, தம்பதிகள் பூஜை நடந்தன. தொடர்ந்து கருத்தரங்கு நடந்தது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் தலைவர் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமை வகித்தார். அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைதலைவர் பிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, வேலுார் தோபா சுவாமிகள் மடம் சுவாமி வேதபிரகாசானந்தா, சிவகாசி ரமேஷ் முன்னிலை வகித்தனர். அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் பொது செயலாளர் சேலம் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி, குற்றாலம் மவுனசாமி மடம் மூர்த்தி சுவாமி, அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா, கந்தர்வகோட்டை யோகி சிவபிரம்மானந்த சரஸ்வதி, வள்ளலார் சன்மார்க்க சங்கம் பண்டாரம் உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினர். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், சித்திரசபை நாட்டியாஞ்சலி, மாலை 3 மணிக்கு கருத்தரங்கு நடந்தது. நெல்லை உமையொருபாக ஆதீனம் உமாமகேஸ்வர சிவாச்சாரிய சுவாமிகள், சின்னசேலம் சுவாமினி சுத்தவித்யானந்த சரஸ்வதி, தர்மபுரி சுவாமி காளீஸ்வரானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு தென்காசி சித்ரா நதி யானைப்பாலம் படித்துறையில் சன்னியாசிகளினால் மகா ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், கங்கா மகா ஆரத்தி குழுவினர் கலந்து கொண்டனர்.