சிங்கம்புணரியில் தயாரான 18 அடி உயர நேர்த்திக்கடன் அரிவாள்கள்; கருப்பர் கோயிலுக்கு அனுப்பி வைப்பு
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 18 அடி உயர நேர்த்திக்கடன் அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு கருப்பர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பேரூராட்சியில் சிலர் பாரம்பரியமாக அரிவாள்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு கோயில்களுக்கு இங்கு நேர்த்திக்கடன் அரிவாள் செய்யப்படுகிறது. இந்நிலையில் அழகர் கோயில் பதினெட்டாம்படி கருப்பருக்கு சிங்கம்புணரியில் உள்ள பட்டறையில் 18 அடியில் இரண்டு நேர்த்திக்கடன் அரிவாள்கள் செய்யப்பட்டது. ஜெயங்கொண்ட நிலையைச் சேர்ந்த பக்தர்கள் இதற்கான ஆர்டர் கொடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக பணி நடந்தது. தலா 200 கிலோ எடை கொண்ட 2 அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வழிபாட்டுக்கு பிறகு இன்று லாரியில் ஏற்றப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
தயாரிப்பாளர் சேகர் கூறுகையில், ஜெயங்கொண்ட நிலை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் இங்கு தொடர்ச்சியாக நேர்த்திக்கடன் அரிவாள் செய்ய ஆர்டர் கொடுக்கிறார்கள். முறையாக பயபக்தியுடன் விரதம் இருந்து அவற்றை தயாரித்து வழங்குகிறோம், என்றார்.